Saturday, October 21, 2017

Aval oru thodar kathai






கே. பாலச்சந்தரின்  இந்த காவியம் புதுமைப் பெண்ணைச் சித்தரித்தது. சமுதாயம் அரசாட்சி செய்யும் பெண்ணை புதுமையாய் கண்டது.

கூர்ந்து கவனித்தால் அவளை முரட்டுப் பெண்ணாய் சித்தரித்தது. 

மிகச்சிறந்த தத்துவப் பாடலை தத்துவக் குரலில் யேசுதாஸ் பாடினார்.  அந்தப் பாடல்  காட்சிகள் பெண்ணை  ஆணவமும் கர்வமும் கொண்டவளாக  காட்டியன . ஆண்  பாவம் என்ற உணர்வை உருவாக்கின. ஞானப் பெண்ணே  என்று அந்தப் பாடல் கிண்டல் அடித்தது. வாழ்வின் பொருள் பெண்ணிற்கு தெரியாதென்று நகைச்சுவை உணர்வூடு எடுத்துக்கூரியது.  

பெண் லிப்ஸ்டிக் போடுவது, ஸ்டைல் பண்ணிக்கொள்வது, ஸ்லீவ்லஸ் அணிவது, தொடர்ந்து முறைப்பது, இரும்பு மனம் கொண்டவள் என்கின்ற முக பாவனை ,  கத்திப் பேசுவது, கோபத்தில் நிலையிழப்பது      போன்ற காட்சிகள் குளோஸ் அப் காட்சிகளாய் வந்தன. இவை அவளை  குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் எதிர்மறையாய்  தோற்றுவித்தன.

படித்த பெண்ணை அடங்காபிடாரியாக இந்தப் படம் சித்தரித்தது. உணர்ச்சிக்குவியலின் முழு அடையாளமாக அவள் வந்தாள் . தத்துவமும்  நகைச்சுவை  உணர்வும் ஆணிற்கும்,  உணர்ச்சியும் கோபமும்   பெண்ணிற்கும் தரப்படடன.

மேலும்,  அவள் தியாகத்தின் சின்னமாக  சித்தரிக்கப்பட்டு  கதா நாயகியாக உயர்த்தப்படடாள். இது ஒருவிதமான கழிவிரக்கத்தையே அன்று படித்த பெண் மேல் உருவாக்கியது. பெண் ஏமாந்தவளாகவே காண்பிக்கப்படடாள்.  அவள் தியாகம் ஒரு பெருந்தன்மையை காண்பிக்காதபடிக்கு அவள் ஏக்கமான முகம்  குளோஸ் அப்பில் காண்பிக்கப்பட்டது .

சிவாஜி கணேசன் தியாகத்தின் சின்னமாக எத்தனையோ படங்களில் காண்பிக்கப்பட்டிருக்கிறார்.  அந்த முக பாவனைகள் சுஜாதாவிற்கு  தரப்படவில்லை. 

இப்படத்தில்  குடும்பத்தை காப்பாற்றவே பெண் அலுவலகம் செல்கிறாள். அதுவும் ஒருவித எரிச்சலோடு செல்கிறாள். அவள் அறிவாளியாகவோ  சமூக சிந்தனை உள்ளவளாகவோ காண்பிக்கப் படவில்லை.

தமிழக  மக்கள் மனதில் இது ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது.  இன்று வரையிலும் பெண் தன் வேலையை ரசித்து, குடும்பத்தையும் நேசித்து வாழ்பவளாக தமிழ் கற்பனை அமையவில்லை. 

ஆனால் நிஜ வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் பெண்கள் தன் தொழிலையும் நேசித்து குடும்பத்தையும் நேசித்து வாழ்கின்றனர். பெரிய காரியங்களை செய்கின்றனர். சமுதாயத்தையும் குடும்பத்தையும் வழி நடத்துகின்றனர்.

இவர்கள் கற்பனைக்  காட்சிகளிலும்   காண்பிக்கப் படவேண்டும். உண்மையான இலக்கியம் அப்போது தான் பிறக்கும்.