குயில் பாட்டு
இனிமையின் கடவுள் என்றிந்தேன்
இசையின் தாயென என்றிந்தேன்
இதய ஸ்வரம் தான் என நினைத்தேன்
இருப்பிடம் ஏதோ தேடி அலைந்தேன்.
மாமர உச்சியினின்று வழுக்கி வந்தாய்
மலையடிவாரத்தில் ஒளிந்து கொண்டாய்
இலைமறை காயாய் என்றும் இருந்தாய்
இருக்குமிடம் மறைத்து கதைத்து வந்தாய்.
அம்மா, என் உயிரே, எந்தன் நெறியே
அந்தக் குரலை எங்கு பெற்றாய், சொல்வாய்
என் கனத்த மனத்தை உருக்கிப் பிசைந்து
என் சிந்தனையைக் கிளறி தூபம் இட்டாய்.
கனவாய் வந்து கதாபாத்திரம் ஆகி
கற்பனைக்கு மெருகு ஊட்டிய தாயே
எதையோ நினைத்து பாடுகிறாய் என்பேன்
என் ஏக்கம் உன் குரலில் கேட்கிறேன்.
வாயத் திறந்து மொழி பேசுவாய் - என்
வருத்தம் தீர ஒரு வார்த்தை தாராய்.
சு. ஸ்ரீ தேவி
சு. ஸ்ரீ தேவி